Temple Guide

பூலோக வைகுண்டம் – ஸ்ரீரங்கம்

Sujatha Desikan has written a quick guide to the Sirangam Temple.  It is in simple and charming Tamil.  In this section he introduces us to a brief history of the temple, before taking us on a prakaram-by-prakaram guided tour of this vast temple complex.  The tour begins with the post Adaiyavalaindhan.

பூலோக வைகுண்டம்

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!

“மேற்குப் பக்கம் தலையை வைத்துக்கொண்டு கிழக்குப் பக்கம் கால் நீட்டி, வடக்குப் பக்கம் முதுகு காட்டி, தெற்கே முகம் நோக்கி கடலின் நிறமுள்ள கடவுளான திருமால் சயனித்திருக்கும் அழகைக் கண்டு என் உடல் உருகுகிறதே, என்ன செய்வேன்?” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன் திருமாலையில் பாடியுள்ளார்.

காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கு அரங்கம் அமைத்து அதற்கு இடையில் இருக்கும் கோவில்; கோவிலைச் சுற்றி நகரம் ஸ்ரீரங்கம். எல்லா கோவில்களுக்கும் கதை இருப்பது மாதிரி ஸ்ரீரங்கத்துக்கும் உண்டு. ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில் இரண்டு விதம். ஒன்று சின்னது, மற்றொன்று பெரியது. அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மனின் தவத்தால் திருப்பாற்கடலிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றியது. அதற்கு பிரம்மன் நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு, இந்த விமானத்தை வழிபட தனது தலைநகரமாகிய அயோத்திக்குக் கொண்டுசென்றான். அதே குலத்தில் வந்த இராமர் இந்த விமானத்தைத் தனது பட்டாபிஷேகத்துக்காக இலங்கையிலிருந்து வந்திருந்த விபீஷணனுக்குப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின்மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரி ஆற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்; எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான்; கலங்கினான். கதறினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான். ரெங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான், ‘தென்திசை இலங்கை நோக்கி’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றிக் கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்.
கதை இத்துடன் முடியவில்லை. கோயிலொழுகில் இதற்குப் பிறகும் கதை தொடர்கிறது.

தர்மவர்ம சோழன் கட்டிய கோவில், காவிரியில் வந்த வெள்ளப்பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. மறைந்த இடத்தைச் சுற்றிக் காடுகள் வளர, கோவில் யாரும் கண்டுபிடிக்க முடியாமல் மறைந்துபோனது. தர்மவர்ம சோழனின் மரபில் வந்த கிளிச் சோழன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடச் சென்று ஒரு மரத்தின்கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த சமயம், அந்த மரத்தின்மேல் இருந்த ஒரு கிளி, “வைகுந்தத்தில் உள்ள விஷ்ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான்; அக்கோவிலை இப்போதும் இங்கு காணலாம்” என்ற பொருளில் ஒரு செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. அதைக் கேட்ட கிளிச் சோழனுக்கு கனவில் விமானம் இருக்கும் இடம் புலப்பட்டது; கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். அதுவே இன்றைய கூகிள் மேப்ஸில் நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம்!

இடம் புலப்பட்டது; கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். அதுவே இன்றைய கூகிள் மேப்ஸில் நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம்!
தர்மவர்மச் சோழன், கிளிச் சோழன் என்பவர்கள் பற்றி வரலாற்று நூல்களில் குறிப்பு ஏதும் இல்லை. இக்கோவில் கருவறையானது வரலாறு தோன்றாத காலத்துக்கு மிக மிக முற்பட்டதாகக் கருதப்படுகிறது, வரலாற்று ஆய்வாளர்கள் இதை Anachronism என்பார்கள். மிகவும் போற்றி வழிபடப்படுகின்ற ஒரு கோவிலை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழமை வாய்ந்ததாகச் சொல்லவேண்டும் என்ற ஆசையில் அமைந்துள்ளன இந்தக் கதைகள். ஸ்ரீரங்கம் கோவில் தோற்றம் பற்றிய செய்திகள் புராண இதிகாச முறையில் சொல்லப்படுகின்றன. பல புராணங்களில் ஸ்ரீரங்கம் பற்றிய கதைகள் வருகின்றன.

ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமாக அல்லது அதை முதன்முதலில் கட்ட ஆரம்பித்தது சோழ மன்னர்கள்தான். கிபி 10-ஆம் நூற்றாண்டு வரை சரியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. அதனால் யார் கட்டினார்கள் என்ற கல்வெட்டோ வேறு சான்றுகளோ இல்லை. கிபி 10-ஆம் நூற்றாண்டு வரையில் இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே இக்கோவில் இருந்தமைக்குச் சான்றாக உள்ளன. ஸ்ரீரங்கத்தைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியமான அகநானூறிலும் (அகம்-137), சிலப்பதிகாரத்திலும் முதலாழ்வார்கள் பாடல்களிலும் உள்ளன. [அகநானூறு கிபி 3-4ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரம் கிபி 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கருதப்படுகிறது]

அகநானூறில் காதலனைப் பிரிந்து வாடும் காதலியின் முகத்தை காவிரி ஆற்றின் மணலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் நடைபெரும் பங்குனி உத்திரத் திருவிழா பற்றிய குறிப்பு சுவாரசியம்.1

சிலப்பதிகாரத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பில், “விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும் நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச் சாய்ந்துகொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது” என்று கூறப்பட்டுள்ளது.2

சங்ககாலத்தவர் எனக் கருதப்படும் முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகியோரின் பாடல்களில் ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன.3

அகநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் முதலாழ்வார்கள் பாசுரக் குறிப்புகளைப் பார்த்தால் ஸ்ரீரங்கம் கோவிலானது சங்க காலத்தில், அல்லது அதற்குச் சற்று முற்பட்ட காலத்தில் உறையூரை ஆண்ட ஒரு சோழ மன்னனால் எழுப்பப்பட்டிருக்கவேண்டும்.

கோயிலொழுகில் கிளிச் சோழன் ஸ்ரீரங்க விமானத்தைக் கண்டுபிடித்து, விமானத்தைச் சுற்றி பிரகாரங்கள் கட்டினான் என்று பார்த்தோம். கிள்ளி என்பது மருவியே கிளி என்று ஆகியிருக்கலாம். கிள்ளி என்பது சோழர்களைக் குறிக்கும் ஒரு பெயர். சங்ககாலத்தில் வாழ்ந்த சோழ அரசர்களில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி என்ற பெயர்கள் நாம் அறிந்தவை. கொச்சகனுக்குமுன் உறையூரை ஆண்ட ஒரு சோழ மன்னன், தன் தலைநகரத்துக்குப் பக்கத்தில், காவிரி கொள்ளிடத்துக்கு இடையே ஒரு கோவிலைக் கட்ட விருப்ப்பப்பட்டு எழுப்பி, பிறகு அதுவே நாளடைவில் விஸ்தரிக்கப்பட்டு இன்று ஏழு பிரகாரங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய ஸ்ரீ வைஷ்ணவத் தலமாக உருப்பெற்றுள்ளது என்று சொல்லலாம். கிளிச் சோழன் யார் என்பதை ஆராய்வதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்; அதனால் வாருங்கள், நாம் கோவிலுக்குள் செல்லலாம்.

சங்க காலம் தொடங்கி சோழ அரசர்களும், கலிங்க அரசர்களும், ஒய்சாள அரசர்களும், பாண்டிய அரசர்களும் மதில் சுவர், கோபுரங்கள் என்று பார்த்துப் பார்த்துக் கட்டி அழகு பார்த்தார்கள். மாலிக் காஃபூர், உலூக் கான் போன்ற முஸ்லீம் படைத் தளபதிகளால் சூறையாடப்பட்டு, நாசப்படுத்தப்பட்டு, பிறகு விஜயநகரப் பேரரசர்களாலும் நாயக்க மன்னர்களாலும் மீட்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம்தான் இன்றைய ஸ்ரீரங்கம்.

‘ஸப்த ப்ராஹார மத்யே’ என்று ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. கோவிலின் பரப்பளவு 156 ஏக்கர். ஏழு பிரகாரங்களைச் சுற்றி இருக்கும் சுவற்றின் நீளம் 32,592 அடிகள், கிட்டத்தட்ட 10 கிமீ.

ஸ்ரீரங்கம் கோவில் அமைப்பில் கர்ப்பகிரஹத்திலிருந்து பிரகாரங்கள் எண்ணிக்கை ஆரம்பிக்கிறது. அதாவது கர்ப்பகிரஹமே முதல் பிரகாரம். சில புத்தகங்களில் எட்டு பிரகாரங்கள் என்று இருக்கும்; அந்தக் கணக்கு கர்ப்பகிரஹமும் ஒரு பிரகாரம் என்று வைத்துக்கொண்டதால். நாமும் அந்தக் கணக்கையே வைத்துக்கொள்வோம். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும்போது நீங்கள் முதலில் நுழையப்போவது எட்டாம் பிரகாரம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s