Temple Guide

அடையவளைந்தான்

The tour of the Srirangam Temple complex starts here.  Sujatha Desikan‘s guide takes us through each prakaram with details of the sannadhis and interesting tidbits about them.

ஸ்ரீரங்கம் கோவில் அமைப்பில் கர்ப்பகிரஹத்திலிருந்து பிரகாரங்கள் எண்ணிக்கை ஆரம்பிக்கிறது. அதாவது கர்ப்பகிரஹமே முதல் பிரகாரம். சில புத்தகங்களில் எட்டு பிரகாரங்கள் என்று இருக்கும்; அந்தக் கணக்கு கர்ப்பகிரஹமும் ஒரு பிரகாரம் என்று வைத்துக்கொண்டதால். நாமும் அந்தக் கணக்கையே வைத்துக்கொள்வோம். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும்போது நீங்கள் முதலில் நுழையப்போவது எட்டாம் பிரகாரம்.

அடையவளைந்தான்

எட்டாம் பிரகாரம் ‘அடையவளைந்தான்’ என்று அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘சர்வெஷ்டானம்’ என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Maze என்ற சொல் அருகே வருகிறது. இங்கே இருக்கும் நான்கு கோபுரங்களும் முடிவு பெறாமல் இருக்கின்றன. (தெற்கு கோபுரம் 1987-ம் ஆண்டு ராஜ கோபுரம் ஆனது.) பெரியவர்களுக்கு இவை ‘ராய கோபுரம்’. சிறியவர்களுக்கு இவை ‘மொட்டை கோபுரம்’.

சின்ன வயதில் கோவிலுக்குப் போகும்போது இந்தத் தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன். 130X100 அடியில் மொட்டையாக இருந்தாலும் கம்பீரமாக இருக்கும். இதில் உள்ள கதவுச் சட்டம் 43 அடியில் ஒரே கல்லினால் ஆனது. மேற்கூரையில் இருக்கும் குறுக்குச் சட்டம் 23-4-4 அளவில் மேலே எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள் என்று வியக்கலாம். அப்போது இதற்குமேல் கோபுரம் கட்டியிருந்தால் அது மேகத்தைத் தொட்டிருக்கும் என்று கற்பனை செய்துள்ளேன். இந்த மொட்டைக் கோபுரங்கள் நாயக்கர் மன்னர்கள் கடைசியாகக் கட்ட ஆரம்பித்து பின்பு ஃபிரஞ்சு, பிரிட்டிஷ்காரர்களின் தாக்குதலால் கட்டுமானப் பணி பாதியில் 1736-1759 ஆண்டுகளில் நின்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தேவதைகள் ஒரு நாள் ராத்திரியில் ஸ்ரீரங்கத்தைக் கட்ட ஆரம்பித்து கடைசியாக ராயகோபுரம் கட்டும்போது விடிந்துவிட்டதால் அவர்கள் சென்று விட்டார்கள் என்று சின்ன வயதில் கதை கேட்டிருக்கிறேன். இன்றும் அந்தக் கதையை நம்பவே எனக்கு ஆசை.
105_0213

தெற்கு ராயகோபுரம் ராஜகோபுரம் ஆனதற்குக் காரணம் 44-ஆவது பட்டத்து ஜீயர் அழகியசிங்கர். 1979 வரை மொட்டையாக இருந்ததை 1987-ஆம் ஆண்டு ராஜகோபுரமாக ஆக்கினார். இன்றும் பலர் அதைக் கட்டியிருக்கக் கூடாது, இலங்கை அழிந்துபோய்விடும் என்று சொல்வதைக் கேட்கலாம். பதின்மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரம் கட்டியபின் ஸ்ரீரங்கத்துக்குக் கூட்டம் வரத் தொடங்கியது. கோபுர உச்சி வானத்தைத் தொடும் என்ற என் கற்பனை முடிவுக்கு வந்தது. ஜீயர் தன் 85-வது வயதில் கோபுரத்தைக் கட்டத் தொடங்கி, 92-வது வயதில் இதைக் கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. இன்றும் ஸ்ரீரங்கம் செல்லும்போது அந்த கோபுரத்தின் அடிப்பாகம்தான் என்னைப் பரவசப்படுத்தும். இப்போது எழுப்பப்பட்ட ராஜகோபுரம் முந்தைய மொட்டை கோபுரத்தைச் சிறியதாக்கி, ஸ்ரீரங்கத்துக்கு வரும் கூட்டத்தைப் பெரியதாக்கியுள்ளது.

இதன் நான்கு மூலைகளிலும் Pilaster என்னும் ஒரு பக்கத் தூண்களின் மேல் கும்பம் மாதிரி அழகிய வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். இதை ‘கும்பபஞ்சரம்’ என்று சொல்வார்கள்.  பழைய படத்தில், இந்த கோபுரத்துக்கு முன்புறம் நாயக்கர்கள் கட்டிய சின்ன மண்டபம் ஒன்று இருக்கும். இன்று இந்த மண்டபம் பெட்டிக்கடையாக மாற்றப்பட்டு தினத்தந்தியும் மாலைமுரசும், வாழைப்பழக் கொத்தும், பெப்ஸியும், கோக்கும் தொங்கவிடப்பட்டுள்ளன. கோவிலுக்கு முன்பு காந்தி சிலை என்பது சென்ற நூற்றாண்டு மற்றும் பெரியார் சிலை என்பது இந்த நூற்றாண்டின் சாதனைகள்.

எட்டாம் பிரகாரத்தில் இன்னும் மூன்று மொட்டை கோபுரங்கள் உள்ளன. இதன் வடிவமைப்புகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். இதில் இருக்கும் தூண்கள் ஒருவிதமான சுருள் வடிவமாகச் செதுக்கப்பட்டிருக்கும். நான் இந்த வடிவத்தை மேல்கோட்டையிலும் மாமல்லபுரத்திலும் பார்த்திருக்கிறேன்.  இவை கோபுரங்களாகக் கட்டப்பட்டனவா அல்லது அரசர்கள் தங்கள் வெற்றியைப் பறை சாற்றுவதற்காக எழுப்பபட்ட நினைவுச் சின்னங்களா என்று தெரியவில்லை. தற்போது இவை சாணியால் வறட்டி தட்டுவதற்கும், ‘இங்கே கம்ப்யூட்டர் முறையில் நியூமராலஜி பார்க்கப்படும்’ என்று விளம்பரப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படுகின்றன. இந்தக் கோபுரங்களில் கொஞ்சம் சிமிண்டைப் பூசி தங்கள் வீட்டுக்கு ஒரு பக்கத் தூண்களாகச் சிலர் உபயோகப்படுத்தியுள்ளனர்.

தெற்கு கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் ‘திருக்குறளப்பன்’ சந்நிதியில் விஷ்ணு, வாமன அவதாரமாகக் காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். திருக்குறளப்பன் என்ற பெயர் குறித்துத் தேடினேன்; இலக்கியத்தில் குறளடி என்பது மிகக் குட்டையான அடியைக் குறிக்கும் சொல். அதே போல குறள், குறளன் என்பவை இலக்கியத் தொடர்களில் மிகவும் குட்டையானவற்றைக் குறிக்கும் சொல். இவை இந்த இரண்டு அடி வாமனனைக் குறிப்பது என்ன அழகு! இந்தக் கோவில் சோழர்கள் காலத்துப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 15-16-ம் நூற்றாண்டு என்று கணக்கிட்டுள்ளார்கள்.

மதுரகவி ஆழ்வார் ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருகையில் பெருமாள் இந்த இடத்தை அவர் தங்குவதற்குக் கொடுத்தார் என்று கோயிலொழுகில் இருக்கிறது. பின்னர் இராமானுஜர் காலத்தில் நம்மாழ்வாருக்குத் தனிச் சந்நிதி ஏற்படுத்தி அங்கே எழுந்தருளப் பண்ணினார்கள்.

தென்மேற்கு மூலையில் வெளி ஆண்டாள் சந்நிதி இருக்கிறது. இங்கே சோழ மற்றும் விஜயநகர வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். நம்பெருமாள் சம்மதம் சொல்ல பெரியாழ்வார் ஆண்டாளை அழைத்துக்கொண்டு வந்து தங்கியிருந்த இடம்தான் இன்றைய வெளி ஆண்டாள் சந்நிதி. அதன் வாயிலே அப்போதெல்லாம் காவிரிக் கரையாக இருந்திருக்கிறது. பின்னர் திருட்டு பயம் காரணமாக உற்சவர் மட்டும் ரெங்க விலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்றப்பட, அது இப்போது உள் ஆண்டாள் சந்நிதி என்று அழைக்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s