Temple Guide

இரண்டாம் திருச்சுற்று

Map of Srirangam-2

Map-2

We are now another step closer to the santum sanctorum as we move into the second prakaram.  Sujatha Desikan shows us the highlights.  (The numbers in brackets refer to the location on the map of Srirangam Temple.  To follow them, keep the Map-2 open in a new Tab.)

இரண்டாம் திருச்சுற்று

இப்போது உள்ளே செல்லும் வாசலுக்கு ‘நாழிகை கேட்டான் வாசல்’ [15] என்று பெயர். இதன் வழியாகச் சென்றால் நாம் இரண்டாம் திருச்சுற்றுக்குச் செல்லலாம்.
இந்த வாசலுக்கு வந்தவுடன் ‘என்ன நாழிகை?’ என்று கேட்பது வழக்கமாம். அதனால் இதற்கு நாழிகை கேட்டான் வாசல் என்று பெயர். உள்ளே நுழைந்தவுடன் நமது அடுத்தச் சுற்றான ராஜமஹேந்திரன் திருச்சுற்று வரும்.

நுழைந்தவுடன் இடது பக்கம் இருக்கும் இடத்துக்கு பெயர் தெற்குக் கல் அறை [16]. இதுதான் பெருமாளுடைய திருவாபரணங்களை வைக்கும் இடம். அதற்கு அடுத்த இடம் கோவில் கருவூலம். பெருமாளுக்குக் காணிக்கையாக வரும் பொருள்கள் வைக்கும் இடம். பக்கத்திலேயே பெருமாளுக்குச் சந்தனம் அரைக்கும் இடம். அதற்குப் பக்கத்தில் பெருமாளுடைய வஸ்திரங்கள் வைக்கும் இடம்.

கொஞ்சம் தூரம் நடந்தால் சில அடிகளில் விஜயரங்க சொக்கநாதரையும் அவரது குடும்பத்தினரையும் (கணவன், மனைவி, மகன், மருமகள்) [6] காணலாம். இந்தச் சிலைகள் யானைத் தந்தத்தால் செய்யப்பட்டவை. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயக்கர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிறையச் செய்திருப்பதாக ஸ்ரீரங்கம் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. 1659-1682 காலகட்டத்தில் சொக்கநாத நாயக்கர் என்பவர் பல தெருக்கள், அக்ரஹாரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள் ஆகியவை கட்டப்பட்டன. பல கட்டடங்களைப் பழுதுபார்த்ததாகக் கல்வெட்டுகள் சொல்கின்றன. 1707-1732 காலத்தில் வாழ்ந்த விஜயநகர சொக்கநாதர் கோவிலுக்கு பல உபகாரங்களைச் செய்துள்ளார். வேத பாடசாலை, கண்ணாடி அறை எல்லாம் இவர் உபயம்தான். இவர்களுடைய சிலைகளை ஏன் இங்கே பார்க்கிறோம் என்று சொல்கிறேன்.

கைசிக ஏகாதசி அன்று இரவு முழுவதும் கைசிக புராணம் படிக்கப்படும். வருட நாள்களில் ஆராதனைகளில் ஏதாவது குறை இருந்தால் நிவர்த்திக்கும்பொருட்டு விடிய விடிய பெருமாளுக்கு 365 பொன்னாடைகள் போர்த்துவர். விடிந்ததும் மீண்டும் உள்ளே செல்ல, பெருமாள், ‘மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு’ என்பதுபோல் கம்பீரமாகப் படியேறும்போது அரையர் பிரத்யேகப் பாசுரங்கள் சேவிக்க, பச்சைக் கற்பூரத்தையும் மலர்களையும் நம்பெருமாள் மேலே வாரி இறைப்பார்கள். ‘கற்பூரப்படி சேவை’ என்று இதற்குப் பெயர்.

ஒருமுறை, இந்தச் சேவையைக் காணச் சொக்கநாதர் குடும்பம் வருவதற்குள் கற்பூரப்படி சேவை முடிந்துவிட்டது என்பதை அறிந்தனர். இனி அடுத்தவருடம்தான் அந்தச் சேவை சாத்தியம் என்பதை அறிந்து அங்கேயே தங்கிவிட்டார்களாம். அதனால் அவர்களுக்கு அங்கே சிலை.

அதற்குப் பக்கத்தில் இருக்கும் இடம் பெருமாளுக்கு மாலை கட்டும் இடம். அதைத் தாண்டி பெருமாளுக்குப் புணுகுக் காப்பு, கஸ்தூரி திலகம் தயாரிக்கும் இடம். அதைத் தாண்டினால் யாகசாலை [7]. அதற்கு எதிர்ப்புறம் தொண்டைமான் என்ற மன்னன் கட்டிய இடம். இதற்கு ‘தொண்டைமான் குறடு’ [8] என்று பெயர்.

சில அடி தொலைவில் ஒரு கிணறு இருக்கிறது. பக்கத்திலேயே சிறியதாக விஷ்வக்ஸேனர் என்ற பெயர் கொண்ட சேனைமுதலியார் சந்நிதி [11]. இந்தச் சந்நிதிக்குப் பக்கத்தில் மேலே ஏறினால் வருவது அர்ஜுன மண்டபம் [12]. மார்கழி மாதத்தில் இங்கேதான் பகல் பத்து உற்சவம் நடைபெறும். இந்த மண்டபத்தில் இரண்டு நாச்சியார் சந்நிதிகள் உள்ளன. சேரகுலவல்லி நாச்சியார் [10] மற்றும் துலுக்க நாச்சியார் [9].

குலசேகர மன்னன் மகள் தன் உள்ளத்தை அரங்கனுக்குப் பறிகொடுத்து நம்பெருமாளுடன் ஐக்கியம் ஆகிவிட்டார் என்று கூறுவார்கள். அதே போல அடுத்த சந்நிதி துலுக்க நாச்சியார் சந்நிதி. முஸ்லீம் படையெடுப்பின்போது அபகரித்துச் சென்ற நம்பெருமாளின்மேல் காதல்கொண்ட அப்துல்லா உசேன் கசன்பி பாதுஷாவின் மகள் சுரதாணி, பெருமாளுடன் ஐக்கியம் ஆகிவிட்டார் என்ற கதை ஒன்று இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு உருவ வழியாடு இல்லை என்பதால் இந்தச் சந்நிதியில் துலுக்க நாச்சியார் வண்ணச் சித்திரம் மட்டுமே இருப்பதைப் பார்க்கலாம். இதை பீபி நாச்சியார் சந்நிதி என்றும் அழைப்பர். இங்கே ஆண்டாள், பெரியாழ்வார், ரெங்கமன்னார் ஓவியங்களும் இருக்கின்றன.

அர்ஜுன மண்டபத்துக்கு எதிர்ப்புறம் இருக்கும் மண்டபத்துக்குப் பெயர் ரேவதி மண்டபம். மாதா மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று நம்பெருமாளுக்கு இங்கே திருமஞ்சனம் நடக்கும். இந்த மண்டபத்தைவிட்டு வெளியே வந்தால் (முன்பு) நிறையக் கிளிகள் இருந்த மண்டபத்துக்குப் பெயர் ‘கிளி மண்டபம்’ [13]. தற்போது சுவற்றில் கிளி மண்டபம் என்று நீல வண்ணத்தில் எழுதி வைத்துள்ளார்கள். இந்த மண்டபத்தைப் புதுப்பித்தவர் திருமங்கை ஆழ்வார். இந்தக் கிளி மண்டபத்திலிருந்து பார்த்தால் தங்க விமானத்தில் உள்ள பரவாசுதேவரைத் தரிசிக்கலாம்.

இந்த மண்டபத்தின் கடைசியில் கிருஷ்ணர் சந்நிதி [14] ஒன்று இருக்கிறது. இங்கே தேவகி, வசுதேவர் ஆகியோரும் இருக்கிறார்கள். இங்கே வசுதேவர் ஒரு கையில் பால் குடமும் மற்றொரு கையில் பாலாடையையும் வைத்திருக்கிறார். கிருஷ்ணர் குடத்தில் பால் சாப்பிட்டதால்தான் எல்லாப் படங்களிலும் குண்டாக இருக்கிறார் போலும். இந்தச் சந்நிதியின் உள்ளேயே இடப்பக்கச் சுவற்றில் ஐஸ்வர்ய ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். சந்நிதியைவிட்டு கீழே இறங்கிவந்தால் நிலைக்கண்ணாடியையும் பெரிய கண்ணாடி ஃபிரேமில் ஸ்ரீநிவாஸர் படத்தையும் காணலாம்.

கிழக்குப் பக்கம் இருப்பவை யாளிப் படிகட்டுகள். இதன் வழியாக சந்நிதிக்குள் செல்லலாம். அங்கே ஒரு வெள்ளை பளிங்குக் கல் பதிக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் தான் இராமானுஜர் உட்கார்ந்துகொண்டு கோவில் காரியங்கள், கணக்குவழக்குகளை மேற்பார்வையிடுவார். அந்த இடத்தில் சற்றே தலையைத் தூக்கிப் பார்த்தால் இராமானுஜருக்காகச் செதுக்கப்பட்ட காஞ்சிப் பெருமாள் தேவராஜனைச் சேவிக்கலாம். இந்த இடத்துக்கு ‘தேவராஜன் கொறடு’ என்று பெயர்.

எதிரே பார்த்தால் சந்தன மண்டபம் என்ற சிறிய மண்டபம் உள்ளது. இங்கே பெருமாளுக்கு விஷேச காலங்களில் திருமஞ்சனமும் விஸ்வரூப தரிசனமும் நடைபெறும். சந்நிதியின் எதிர்ப்புறம் விளக்கு தாங்கி நிற்கும் பாவைகளைக் காணலாம். பொன்னரங்கம் என்று இதற்குப் பெயர். சரியாக ரெங்கநாதருக்கு எதிரே சின்ன மண்டபத்தில் சந்நிதி கருடன் [5] இருக்கிறார். கருடன் சந்நிதிக்கு இடது பக்கம் கண்ணாடி பதிக்கப்பட்ட திருப்பள்ளியறை இருக்கிறது. அதையும் தாண்டி வந்தால் முதல் சுற்றுக்குச் செல்லும் வாசலான திரு அணுக்கன் வாசலைப் பார்க்கலாம்.

Advertisements

One thought on “இரண்டாம் திருச்சுற்று

  1. Pingback: ஶ்ரீ ராமானுஜர் திரைப்படம், துலுக்கநாச்சியார், சரித்திர ஆதாரங்கள் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s