Temple Guide

ஏழாம் & ஆறாம் திருச்சுற்று

We proceed to the next prakarams – the 7th (known as Chitthirai Veedhi) and the 6th (Uththirai Veedhi) – with Sujatha Desikan as our reliable guide.

ஏழாம் திருச்சுற்று

சித்திரை வீதி என்று எல்லோரும் அழைப்பார்கள். மாடமாளிகைகள்; தேரோடும் வீதி என்றும் இதைச் சொல்வார்கள். நான்கு கோபுரங்களைக் கொண்டது. 13-ம் நூற்றாண்டு ஒய்சாளர்களாலும் 14-ம் நூற்றாண்டு பாண்டியர்களாலும் கட்டப்பெற்றவை என்கிறார்கள். இங்கே கிழக்கு கோபுரம் ‘கலியுகராமன் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்த வீதி ‘கலியுகராமன் வீதி’ என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று கோபுரங்களைக் காட்டிலும் இந்தக் கோபுரம் அடிப்பாகம் அளவில் பெரியதாக இருந்தாலும் (அடிப்பாகம் கிட்டத்தட்ட வெள்ளைக் கோபுரம் அளவு இருக்கும்) அதற்குத் தகுந்தார்போல் மேல்பாகம் உயரமும் குறுகலுமாக இல்லாமல் கட்டைகுட்டையாக இருக்கும்.

(சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதை’களில் வரும் ‘ரங்கு கடை’ இங்கேதான் இருக்கிறது. ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குப் படம் வரைய இங்கே சென்றபோது ரங்கு கடையிலிருந்து ஒருவர் ஓடிவந்து, “சார், நீங்கதான் ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்கு படம் வரையப் போறீங்களா?” என்று கேட்டார். அது எப்படி அவருக்குத் தெரியும் என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். அவர், “இந்தக் கடையை வேற யார் படம் எடுக்கப் போறாங்க?” என்றார்.)

இந்தக் கோபுரத்தின் நான்காம் நிலைப்படியின் மேற்பகுதியில் ‘கலியுகராமன்’ என்று கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் இடதும் வலதுமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் இரு தலை உடைய கருடனை செதுக்கியுள்ளார்கள். இந்தப் பறவையின் பெயர் கண்டபேருண்டா (Gandabherunda). இதே மாதிரி செதுக்கப்பெற்ற உருவத்தை ஆந்திர, கர்நாடகக் கோவில்களில் பார்க்கலாம். ஜடவர்ம வீர பாண்டியன் என்ற அரசனின் மற்றொரு பெயர் கலியுகராமன். மேற்கூரையில் இரண்டு மீன் சின்னங்களுக்கு நடுவில் அங்குசம் செதுக்கப்பட்டிருக்கும். இரண்டு தலை கொண்ட பறவை ஒய்சாளர்களின் சின்னமாகவும் இரண்டு மீன்கள் பாண்டியர்களின் சின்னமாகவும் இருப்பதைக் கவனிக்கலாம்.

இந்தக் கோபுரத்தின் பக்கத்தில் இருக்கும் தேர், சித்திரைத் தேர். சிறிது தூரம் நடந்து வந்தால் ‘திட்டி மூலை’ அல்லது ‘கோரத மூலை’ என்று ஒரு சிறிய தெரு வரும். இதன் வழியாக முன்பு நாம் சென்ற அடையவளைந்தானுக்குச் செல்லலாம். அதனுள் நுழைவதற்குமுன் இருக்கும் சிறிய தேர் ‘கோரதம்’ எனப்படும். பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் வாத விவாதத்தை தாயாரின் தகப்பன் ஸ்தானத்திலிருந்து தீர்த்துவைக்கும் நம்மாழ்வாரால் பெருமாளுக்குப் பரிசாக அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். பங்குனி மாதம் உத்திரத்துக்கு மறுநாள் சித்திரைவீதிப் பிரகாரத்தில் கோரதம் உலா வரும்.

ஆறாம் திருச்சுற்று

ஆறாவது திருச்சுற்று உள் திருவீதி, உத்திர வீதி என்று அழைக்கப்படுகிறது. கிழக்குப் பகுதி வெள்ளைக் கோபுரம் பக்கத்தில் மாத்வர் மடம் ஒன்று இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ‘வாணி விலாஸ் பிரஸ்’ இருக்கிறது. இந்த அச்சகத்தில் என்ன விஷேசம் என்றால் இது முன்னாள் விஜயநகரத்து மன்னரின் அரச மாளிகை. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அச்சுதராயர் தனது படைகளுடன் ஸ்ரீரங்கத்தில் இந்த அரச மாளிகையைக் கட்டிக்கொண்டு தங்கியிருந்தார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஒரு காலத்தில் இதில் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகள் கொண்டு பல அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சம்பிரதாயப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இன்று இது இடிந்தநிலையில், ‘வாணி விலாஸ் சிண்டிகேட்’ என்று சின்ன போர்டைத் தொங்கவிட்டுகொண்டு, தன் வரலாற்றுச் சுவடுகளை அச்சிட யாராவது இருக்கிறார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறது.

தென்கிழக்குப் பகுதியில் மணவாள மாமுனிகள் மடம் ஒன்று இருக்கிறது. இதன் பழைய பெயர் பல்லவராயன் மடம். இதில் இருக்கும் தூண்களில் சோழர் கால வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். சின்னதாக மணவாள மாமுனிகளின் செப்பு விக்கிரகமும் இங்கே இருக்கிறது.

இந்தப் பிரகாரத்துக்குப் பிறகு உள்ளே செல்லும் பிரகாரங்களில் வீடுகள் எதுவும் கிடையாது; அதனால் இதற்குப் பிறகு காலணிகள் ஏதும் அணியக்கூடாது. இந்த வீதியில் ஒரு பக்கம் மட்டுமே வீடுகளும் எதிர்ப்புறம் கோவிலின் மதிற்சுவரும் இருப்பதைக் காணலாம். (இதற்கு முந்தைய சுற்றுகளிலேயே கடைகளில் செருப்பைக் களைந்துவிட்டு வருபவர்கள் இந்தப் பிரகாரம்வரை கடுமையான வெயிலில் பாதம் பொரிய நடக்கவேண்டியிருக்கும். இந்தப் பிரகாரத்தில் களைந்தாலே போதுமானது.)

இந்தச் சுற்றில் மூன்று கோபுர வாயில்கள் மட்டுமே உள்ளன. மேற்குப் பகுதியில் கோவிலின் உள்ளே செல்ல கோபுர வாயில் கிடையாது. வடக்குக் கோபுரம் பக்கத்தில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடம் இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தைக் கவனித்தபோது இங்கேதான் இராமானுஜர் எழுந்தருளியிருந்தார்; அவர் திருநாட்டுக்குச் சென்றபிறகு இங்கே ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்ற பெயர் கொண்டு பரம்பரை பரம்பரையாக ஜீயர்கள் எழுந்தருளி, பெருமாளுக்குக் கைங்கரியம் செய்கிறார்கள்.

தெற்குப் பகுதியில் கோபுரத்தின் இடப்பக்கம் பெரிய தேர் ஒன்று இருக்கும்; ‘தைத் தேர்’ என்று பெயர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s