Temple Guide

ஐந்தாம் திருச்சுற்று -1

Map of Srirangam-5.1

Map-5.1

In a way, the real “Temple” begins here.  We proced with Sujatha Desikan as our expert guide.  (The numbers in brackets refer to the locations on Map of Srirangam Temple. To follow them keep the Map-5.1 open in the next Tab. )

ஐந்தாம் திருச்சுற்று

அகளங்கன் திருவீதி என்பது ஐந்தாம் திருச்சுற்று. தெற்கு வாசல் கோபுரத்தில் IMG_7167LRநியான் விளக்கில் ‘ரெங்கா ரெங்கா’ இருப்பதால் இன்று  என்று சொன்னால்தான் பலருக்கும் தெரிகிறது. ஆனால் இந்தக் கோபுர வாசலுக்குப் பெயர் நான்முகன் கோபுரம் [65]. சோழ மன்னன் அகளங்கன் இந்தத் திருச்சுற்றைக் கட்டினான் என்பர். இந்த வாசல் வழியாக நாம் நுழைந்தால் நாம் செல்லும் இடத்துக்குப் பெயர் ரெங்கவாசல்.

உள்ளே செல்லும்போது இரண்டு பக்கமும் பல கடைகளைப் பார்க்கலாம். திருமண் கட்டி, மாக்கல் சொப்பு, தண்டவாளத்தில் செய்த தோசைக் கல், பக்திப் புத்தகங்கள், பரமபதப் படம், தாயக்கட்டை, பல்லாங்குழி, அர்த்தமுள்ள இந்துமதம் என்று சகலமும் கிடைக்கும். இந்தப் பிரகாரத்தின் சுவர்தான் கோவிலுக்கு அரணாக விளங்குகிறது.

உள்ளே நுழைந்தவுடன் முதலில் நாம் பார்க்கும் சிறிய நாலு கால் மண்டபத்துக்குப் பெயர் திருவந்திக்காப்பு மண்டபம் [66]. உற்சவ காலங்களில் திருவீதி வலம்

வந்தபின் இந்த மண்டபத்தில் பெருமாளுக்கு திருஷ்டி கழித்துவிட்டுத்தான் உள்ளே எழுதருளப் பண்ணிக்கொண்டு செல்வர். இந்த மண்டபத்தில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் கம்பரைப் பார்க்கலாம். இவர் முதலில் நாதமுனிகள்முன் இராமாயணத்தைப் பாடிக் காட்டியதைக் குறிக்கும் வண்ணம் இந்தச் சிலை அமைந்துள்ளது என்கிறார்கள். (ஆனால் நாதமுனிகளின் காலத்துக்குப் பின்னர், இராமானுஜரின் காலத்துக்குப் பின்னர்தான் கம்பனின் காலம். எனவே கம்பன் நாதமுனிகளுக்குமுன் இராமாயணத்தைப் பாடிக் காட்டியிருக்க முடியாது.)

இந்த மண்டபத்துக்கு இடது பக்கத்தில் இருக்கும் சந்நிதியில் ஸ்ரீவைஷ்ணவ மு

க்கிய ஆசாரியரும் நாலாயிர திவ்யப் பிரபந்ததைத் தொகுத்தவரான நாதமுனிகள் [67], நாதமுனிகளின் பேரனான ஆளவந்தார், ஆளவந்தாரின் புதல்வரான திருவரங்கப் பெருமாள் அரையர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

நாதமுனிகள் ஸ்ரீரங்கத்தில் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை இசைக்க முதன்முதலில் ஏற்பாடு செய்து, அதற்காக அரையர்களை நியமித்தார் என்ற குறிப்புகள் கோயிலொழுகில் இருக்கிற

Kambar

Kambar

து. இங்கே இருக்கும் திருவரங்கப் பெருமாள் அரையர், கையில் கைத்தாளக் கருவியுடன் (ஜால்ரா) இருப்பதைப் பார்க்கலாம்.

இந்தச் சந்நிதிக்கு எதிராக இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. ஒன்று இராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார் சந்நிதி [87]. கண்பார்வைக் கோளாறுகளுக்காக இங்கே வேண்டிக்கொள்வார்கள். மற்றொன்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதி [86]. இந்தச் சந்நிதிகள் இராமானுஜரின் காலத்துக்குப் பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

இந்த இடத்தில் நாம் இடது பக்கமாக உள்ளே நுழையப் போகிறோம். தரிசனங்கள் முடித்துவிட்டு வலது பக்கம் வழியாக வெளியே வருவோம்.

இனி, இடதுபுறத்தில் நாதமுனிகள் சந்நிதிக்குப் பக்கத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு வெளிப்புறம் மேல்தளத்துக்குச் செல்லப் படிகள் இருக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்றால் வரிசையாக கோபுரங்கள், விமானங்கள், கருவறையின்மீது இருக்கும் தங்க விமானம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

இங்கே இருக்கும் ஆண்டாள் சந்நிதிக்குப் பெயர் ‘உள் ஆண்டாள் சந்நிதி’ [73]. பழைய பெயர் ‘இராமன் தோப்பு’. 15-ம் நூற்றாண்டுக்கு முன் இங்கே இருந்த இராமரை ‘தோப்பு இராமர்’ என்று அழைத்தனர். பிறகு 15-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஆண்டாளை (உற்சவர்) பிரதிஷ்டை செய்தார்கள் என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. தற்போது உள் ஆண்டாள் சந்நிதி என்று அழைக்கிறார்கள். இன்றும் இராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் இருக்கிறார்கள். உள்ளே உடையவர், பெரியாழ்வார் விக்கிரகங்களும் இருக்கின்றன. இந்தச் சந்நிதியில் இருக்கும் வேலைப்பாடுகள் விஜயநகர அரசர்கள் கைவண்ணம்.

ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கத்தில் இருப்பது வேணுகோபாலன் சந்நிதி [72]. ஸ்ரீரங்கம் கோவிலிலேயே மிகவும் அழகிய சிற்பங்கள் இங்கும் சேஷராயர் மண்டபத்திலும்தான் இருக்கின்றன என்றே சொல்லலாம். இங்கே இருக்கும் சிற்பங்கள் நம் பொக்கிஷம். கண்ணாடி பார்க்கும் மங்கை, வீணாவாதினி, கிளியை ஏந்தி நிற்கும் பெண் என்று இங்கே இருக்கும் சிற்பங்களை வெளிநாட்டவர்கள் படம் பிடித்துக்கொண்டு போகிறார்கள். இந்தச் சிற்பங்கள் விஜயநகர அரசர்கள் மற்றும் நாயக்கர்களின் கைவண்ணம். நிச்சயம் ஸ்ரீரங்கத்தில் பார்க்க வேண்டிய சந்நிதி. [ஒய்சாளர்களால் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.]

ஆண்டாள் சந்நிதிக்கு முன்புறம் இருக்கும் மண்டபத்துக்குப் பெயர் ‘ரெங்கவிலாஸம்’ [68]. கடைகள் அதிகம் இருப்பதாலும், யாத்திரிகர்கள் கையோடு கொண்டுவரும் எலுமிச்சை சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு இங்கேயே படுத்துக்கொள்வதாலும், இந்த மண்டபத்தில் இருக்கும் விஜயநகரச் சிற்பங்களை யாரும் அவ்வளவாக ரசிப்பதில்லல. இந்த மண்டபத்தின் தூண்களில் சிங்கம்போலச் செதுக்கியிருப்பதையும் மண்டபத்தின் மேல்பகுதியில் பலவகையான வர்ணச் சித்திரங்களையும் பார்க்கலாம். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் கல்யாணங்களுக்கு இங்கேதான் மாப்பிள்ளை அழைப்பு ஜானவாசம் நடைபெறும். அங்கிருந்து காரில் மாப்பிள்ளையை ஊர்வலம் அழைத்துச் செல்வார்கள். (எனக்கென்னவோ மாப்பிள்ளை, மாமானார் இருவருகே பலியாடு மாதிரித் தெரிவதாகத் தோன்றும். பெண்கள் வழக்கம்போல் பட்டையைக் கிளப்புவார்கள்.)

ரெங்கவிலாஸ மண்டபத்தின் வெளிப்புறம் சின்ன ஆஞ்சநேயர் சந்நிதி [71] இருக்கிறது. வெளியூர் பக்தர்கள் இங்கே விளக்கு வைத்துச் சேவிப்பார்கள். ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எதிர்ப்புறம்தான் கார்த்திகை தீபத் திருவிழா (சொக்கப்பனை) நடைபெறும்.

இந்த ஆஞ்சநேயர் சந்நிதிக்கு மேற்குப் பக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதியும் [74] கிழக்குப் பக்கம் உடையவர் என்னும் இராமானுஜர் சந்நிதியும் [83] இருக்கின்றன.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் வேண்டிக்கொள்வது எல்லாம் கைகூடும் என்று பலர் நம்புவதால் இங்கே எப்போதும் கூட்டம் இருக்கும். தேர்வு எழுதும் மாணவர்கள், வேலைவாய்ப்பு, திருமணம், தோஷங்கள், பரிகாரம் என்று சகலத்துக்கும் எல்லோரும் இங்கே வந்து சக்கரம் போலச் சுற்றுகிறார்கள். அப்படி சந்நிதியைச் சுற்றும்போது ஒரு மூலையில் இராமானுஜரைத் தன் ஆசானாகக் கருதி, இராமானுஜ நூற்றந்தாதியைப் பாடிய திருவரங்கத்தமுதனாருக்குச் சந்நிதி இருக்கிறது.

அதற்குமுன் வலப்புறம் வழியாக வெளிவருவோம் என்று சொன்னேனே, அந்த இடம் – உள் ஆண்டாள் சந்நிதிக்கு எதிர்ப்புறம், அதாவது ரெங்கவிலாஸ மண்டபத்துக்குக் கிழக்குப் பக்கமும் வரிசையாகக் கடைகள் இருக்கின்றன. அங்கே கடைகளுக்கு நடுவில், ‘அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே’ என்று பாடிய திருப்பாணாழ்வார் சந்நிதி [84] இருக்கிறது. மிகப் பெரிய உருவில் வீர ஆஞ்சநேயர் பிரதானமாகக் காட்சி தருகிறார். இதைத் தவிர உள்ளே லக்ஷ்மி நாராயணனையும் கருடாழ்வாரையும் வெண்கலச் சிலைகளாகக் காணலாம். இந்தக் கோவில் கருவறையை சோழர்கள் கட்டியதாகச் சொல்லலாம். வெளியே இருக்கும் தூண்கள் விஜயநகர காலத்தவை என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

இந்தச் சந்நிதிக்கு எதிரே இருப்பது மஹாபலி மண்டபமும் [70] துவஜஸ்தம்பமும் [69]. உள்ளே தங்கத் தகடு வேயப்பட்ட இன்னொரு பலிபீடமும் துவஜஸ்தம்பமும் உண்டு.

திருப்பாணாழ்வார் சந்நிதிக்குப் பக்கத்தில் அதே வரிசையில், எட்டு அடி வெளியே வருவதற்கு நடந்தால், விட்டல் கிருஷ்ணன் சந்நிதி [85]. உள்ளே மூலவர் கிருஷ்ணர். வெண்கலத்தால் ஆன நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் சிலைகளும் உள்ளன.

இப்போது மீண்டும் உள்ளே. சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிர்ப்புறம் உடையவர் என்று போற்றப்படும் இராமானுஜர் சந்நிதி இருக்கிறது. இங்கே போகும் வழியிலேயே கோவில் தேவஸ்தான அலுவலகம் [64], கோவில் அதிகாரியின் அலுவலக அறை, கழிவறைகள் ஆகியவற்றைக் காணலாம். இராமானுஜர் சந்நிதியாக இருக்கும் இடம், முன்பு பெருமாளின் வசந்த மண்டபமாக இருந்தது. இங்கு இருக்கும் இராமானுஜர் ‘தானான திருமேனி’ என்பர். இராமானுஜர் பரமபதம் அடைந்ததும் அவரது திருமேனியை இந்த வசந்தமண்டபத்தில் எழுந்தருளப்பண்ணுமாறு ரங்கநாதன் விரும்பியபடியே செய்யப்பட்டது என்பர். இங்கே இராமானுஜர் ஆராதனை செய்த காஞ்சி வரதராஜப் பெருமாள், ஆளவந்தார் விக்கிரகங்கள் இருக்கின்றன. வசந்த மண்டபத்தில் ஆளவந்தார் சந்நிதியும் உண்டு. ஆனால் விக்கிரகங்கள் கிடையாது. அது பெருமாளின் கண்ணாடி அறையாக உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் மூலவரான இராமானுஜரின் திருமேனி அவர் உயிர் நீத்த உடல் என்று சிலர் நம்புகிறார்கள். உடையவருடைய திருமேனி அந்தச் சந்நிதியில் மூலவருக்குக்கீழ் திருப்பள்ளிப்படுத்தப்படுள்ளது என்பதுதான் உண்மை. உடையவர் திருப்பள்ளிப்படுத்தப்பட்டபின் அந்த இடத்தில் மெழுகால் ஆன விக்ரஹமாகச் செய்யப்பெற்றதுதான் இந்தத் திருமேனி. இந்த விக்ரஹம் உருவாக்கப்பட்டபோது, அவர் திருமேனியில் சாத்தப்பட்ட காவி வஸ்திரங்கள் மெழுகுடன் சேர்த்துக் குழைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருமேனிக்கு இரண்டு முறை குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைக்கொண்டு திருமஞ்சனம் செய்து பாதுகாக்கப்படுகிறது.

நம்பெருமாளுக்கு அதன்பிறகு சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு முன்பாக வலப்புறம் பிரியும் நந்தவனத்தில் [63] புதிதாக வசந்த மண்டபம் [75] கட்டப்பட்டுள்ளது. கோடையில் இங்கே வசந்தோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

இராமானுஜர் சந்நிதிக்கு வெளியில் பார்த்தசாரதி சந்நிதி [82] ஒன்று இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்களிலேயேகூட பலருக்கு இந்தச் சந்நிதி இருப்பது தெரியாது. அதையொட்டி பிள்ளை உலகாசிரியர் (பிள்ளைலோகாச்சாரியர் என்று வழக்கில் சொல்வார்கள்) சந்நிதி [81].

இந்தத் திருச்சுற்றின் வடக்குப் பக்கம் சென்றால் தாயார் (நாச்சியார்) சந்நிதி [42]. மூலவர் ஸ்ரீரங்கநாயகித் தாயார், ‘படி தாண்டாப் பத்தினி’ என்று சொல்வார்கள். அதனால் இவருடைய எல்லா உற்சவங்களும் இந்தக் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும்.

தாயார் சந்நிதிக்குச் செல்லும்போது இடதுபுறம் சின்ன ஆஞ்சநேயரைப் பார்க்கலாம். நம் மக்களுக்கு ஒரு வழக்கம் உண்டு. ஆஞ்சநேயர் அல்லது கிருஷ்ணரை எங்காவது பார்த்தால் உடனே வெண்ணையைத் தடவிவிடுவார்கள். அதே போலத்தான் இங்கே இருக்கும் ஆஞ்சநேயருக்கு வெண்ணையைத் தடவி உள்ளார்கள். தாயார் சந்நிதி 13-14-ம் நூற்றாண்டு என்று சொல்லலாம். தென் இந்தியாவில் தாயார் சந்நிதிகள் விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் வந்தது என்கிறது வரலாற்று ஆராய்ச்சி.

உள்ளே இரண்டு மூலவர்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஒருவர் இஸ்லாமியரின் படையெடுப்புக்குப் பின்னால் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மற்றொருவர் அந்தப் படையெடுப்பு நிகழும் நேரத்தில் அவர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்ற காரணத்தால் பிரகாரத்தில் உள்ள வில்வமரத்தின் அருகே துளசிமாடத்துக்கு அடியில் ஒளித்துவைக்கப்பட்டவர். முஸ்லீம் படையெடுப்புக்குப்பின் பூமிக்கு அடியில் இருந்த தாயாரைத் தேடிப் பார்த்தனர் ஆனால் கிடைக்கவில்லை. அதனால் வேறு ஒரு தாயாரைச் செய்து பிரதிஷ்டை செய்தனர். உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திரும்பக் கிடைத்த பின்னர் முதல் தாயார் அவரே மேலே தோன்றி தன்னைக் காட்டிக்கொண்டதால், அவரைத் திரும்பவும் பிரதிஷ்டை செய்தார்கள் என்பர்.

தாயார் சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபம் பங்குனி உத்திர மண்டபம் [43] எனப்படும். தாயார் சந்நிதியில் தூண்களில் பல நல்ல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். விபீஷண சரணாகதிப் பாத்திரங்களான இராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், விபீஷணன், சுக்ரீவன், ஜாம்பவான் போன்றோரையும், கூடவே ஆழ்வார்களையும் பார்க்கலாம். இந்த மண்டபத்தில்தான் உறையூர் சென்று திரும்பும் பெருமாளை வாசலில் நிற்க வைத்து கேள்வி கேட்டு, பிறகு இரண்டு பேரும் ஜோடியாக இருக்கும் ‘சேர்த்தி உற்சவம்’ நடைபெறும்.

இதே மண்டபம்தான் இராமானுஜர் கத்யத்ரயத்தை முதலில் சேவித்த இடம். (கத்யத்ரயம் என்பது இராமானுஜன் இயற்றிய சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்ற மூன்று நூல்கள். இதன்மூலம் இராமானுஜர் சரணாகதி செய்துகொண்டு இறைவனை அடைந்தார்.) பெருமாளுடன் தாயார் இருக்கும் சமயமாகப் பார்த்து இராமானுஜர் இங்கு கத்யத்ரயம் சேவித்தார் என்பார்கள். அதனால் இன்றும் இந்த உற்சவத்தின்போது கத்யத்ரயம் சேவிப்பது வழக்கம். தாயாரின் சிபாரிசு கிடைக்கும் அல்லவா?

தாயார் சந்நிதியில் இரண்டு கல் யானைகள் இருக்கும். சின்ன வயதில் நான் இதில் ஏறி உட்கார்ந்து விளையாடியிருக்கிறேன். குழந்தைகளுடன் போனால் நிச்சயம் இந்த யானைமீது ஏற்றிவிடுங்கள்.

தாயார் சந்நிதிக்கு வெளியே வந்தால் இருக்கும் நான்கு கால் மண்டபத்துக்குப் பெயர் ‘கம்பர் மண்டபம்’ [41]. இங்குதான் கவிச்சக்கரவர்த்தி கம்பர், தன் இராமகாதையை அரங்கேற்றம் செய்தார்.

கம்பர் மண்டபத்துக்கு எதிர்ப்புறம் சற்றே பெரிய மண்டபத்தைப் பார்க்கலாம். இங்கே இராமானுஜருக்கும் யக்ஞ மூர்த்தி என்பவருக்கும் விவாதம் நடந்தது என்று ‘குருபரம்பரை பிரபாவம்’ மற்றும் ‘திவ்யசூரி சரிதம்’ கூறுகிறது. இதற்குப் பெயர் ‘கருத்துரை மண்டபம்’ என்றும் இங்கே பெரியவாச்சான் பிள்ளை உபன்யாசம் செய்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மண்டபத்துக்குப் பின்புறம் சில யானை சிலைகளை முன்பு பார்த்திருக்கிறேன். இப்போது அவை எல்லாம் காணவில்லை; இரும்பு கேட் போட்டு மூடப்பட்டே இருக்கிறது.

இந்த மண்டபத்துக்கு முன்னால் ஸ்ரீவேதாந்த தேசிகன் சந்நிதி [46] இருக்கிறது. தென்கலை, வடகலை சண்டையால், தேசிகர் சந்நிதியில் இருக்கும் உற்சவர் வெளியே வரக்கூடாது என்று கோர்ட் ஆர்டருக்குக் கட்டுப்பட்டு அவரும் படி தாண்டாமல் இருக்கிறார்! நாம் படி தாண்டினால் வடக்கு வாசல் கோபுரம் [76] வழியாக வெளியே வடக்கு உத்தர வீதிக்குப் போய்விடலாம். ஆனால் இப்போது வேண்டாம்.

தேசிகர் சந்நிதிக்கு உள்ளேயே பல ஆழ்வார் பாசுரங்களுக்கு வியாக்யானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை சந்நிதி [48] ஒன்றும் இருக்கிறது.

கம்பர் மண்டபத்துக்கு இடப்பக்கம் இருப்பது சற்றே வித்தியாசமான நரசிம்மர் சந்நிதி; மேட்டழகிய சிங்கர் சந்நிதி [40] என்பது பெயர். இதுவும் தன்வந்திரி சந்நிதியும் மட்டும்தான் ஸ்ரீரங்கத்திலேயே படி ஏறிப் போய் சேவிக்கவேண்டிய சந்நிதிகள். ஹிரண்யகசிபுவைத் தன் மடிமீது வைத்துக் கிழித்தபோது இருக்கும் கோலத்தில் இவரைப் பார்க்க பயங்கரமாக இருக்கும். வெளிப்பிரகாரத்தில் பல வண்ண ஓவியங்களுடன் பார்க்கவேண்டிய இடம். மேல் மண்டபம் சோழர் காலம் என்றும் கீழ் மண்டபம் பாண்டியர் காலம் என்றும் சொல்கிறார்கள். பல சந்நிதிகளைச் சுற்றிவிட்டு இங்கே வரும்போது, கொஞ்சம் சோர்ந்துவிடுவதால் நிறையப் பேர் கீழிருந்தே சேவித்துவிடுவார்கள். மேலிருந்து அர்ச்சகர் உங்களை சில சமயம் “மேலே வாங்கோ” என்று அழைப்பார். ஏதோ தட்சணை கேட்கப் போகிறார் என்று பயந்து பலர் ஓடிவிடுவார்கள். மேலே சென்றால் தீர்த்தத்துக்குபதில் பானகம் கிடைக்கும்.

கீழே இறங்கி வெளியே வந்தால் வாசுதேவப் பெருமாள் சந்நிதி [37]. அந்தச் சந்நிதியிலேயே தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் வியாஸ முனிவரும் இருக்கிறார்கள். பக்கத்திலேயே சந்தான கோபாலன் சந்நிதி [50], சிம்ஹாத்ரி அப்பன் சந்நிதிகளை [47] பார்க்கலாம். இந்த இடத்தில் பிரபலமான ‘ஐந்து குழி மூன்று வாசல்’ [39] இருக்கிறது. ஒரு கல்லில், விரல் நுழையும் அளவு ஐந்து குழிகள் தோண்டி அந்தக் கல்லைக் கீழே பதித்திருப்பார்கள். இந்தப் பாறையைச் சுற்றி மூன்று வாசல்கள் இருப்பதால் இதற்கு ‘ஐந்து குழி மூன்று வாசல்’ என்று பெயர். இங்கு தாயார் ‘அரங்கன் வருகிறாரா?’ என்று தனது கையை ஊன்றி மூன்று வாசல்களிலும் பார்த்தாராம்; அவர் அப்படிப் பார்த்தபோது ஏற்பட்டதுதான் இந்த ஐந்து குழி என்று ஒரு கூற்று நிலவுகிறது. இது தவறு. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்து பார்த்திருக்கச் சாத்தியமில்லை.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும். தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர தத்துவம். அர்த்தபஞ்சகம் என்பது (1) அடையப்படும் பிரம்மம், (2) அடையும் ஜீவன், (3) அடையும் வழி, (4) அடைவதால் ஏற்படும் பயன், (5) அடைவதற்கு உள்ள தடைகள் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும். ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.

இந்த ஐந்துகுழி மூன்று வாசலுக்கு எதிரிலேயே மிகச் சிறிய லக்ஷ்மிநாராயணன் சந்நிதி உள்ளது. பட்டர் மட்டுமே உள்ளே நுழைந்துவர முடியும் அளவுக்குச் சிறியது. ஆனால் அழகான பெருமாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s