Temple Guide

நான்காம் திருச்சுற்று

Map of Srirangam-4

Map-4

We enter the next prakaram – the fourth – which is home to sevaral sannidhis.  Sujatha Desikan is our guide.  (The numbers in brackets refer to the locations on Map of Srirangam Temple. To follow them, keep the Map-4 open in a new Tab.)

நான்காம் திருச்சுற்று

இனி நான்காவது திருச்சுற்றுக்கு அல்லது திருமங்கை மன்னன் திருச்சுற்றுக்குச் செல்லலாம்.

கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தினோமே, அதை ஒட்டிய கார்த்திகை கோபுரம் [29] வழியாக உள்நுழைய வேண்டும். இதை ஆலிநாடான் சுற்று என்றும் கூறுவர். முதலில் இங்கே இருக்கும் கருடாழ்வாரை [31] சேவித்துவிடலாம். (சமயபுரம் மாரியம்மன் மாதிரி) பழுக்காய்ச் செப்பில் செய்யப்பட்டு, உருவில் மிகவும் பெரிதாக இருக்கும் இந்தக் கருடனை சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இன்றும் கருடன்மீது இருக்கும் பாம்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. பேய், பிசாசு, பரீட்சை என்று எதைப் பார்த்து பயந்தவர்களுக்கும் இங்கே பட்டர் கருடாழ்வாரின் தீர்த்தத்தை முகத்தில் அடிப்பார். தவிரவும் அனைத்து வியாதிகளுக்கும் நிவர்த்தித்துக்கொள்ள இங்கேதான் வேண்டிக்கொள்வார்கள்.

கருடாழ்வார் சந்நிதிக்கு முன்பு இருக்கும் மண்டபம் பெயர் கருட மண்டபம் [32]. இங்கே இருக்கும் தூண்களில் இருக்கும் சிற்பங்கள் நாயக்கர் காலம். இந்தச் சிற்பங்களை ஏற்பாடு செய்த்து திருமலை நாயக்கரும் அவருடைய சிற்றரசர்களும் என்பர். மண்டபத்துக்குக் கிழக்குப் பக்கம் சின்னதாக சூரிய புஷ்கரணி [61]. பக்கத்திலேயே கோவில் பிரசாதங்கள் விற்கக் கிடைக்கும்.

கருடாழ்வார் சந்நிதிக்கு மேற்குப் புறம் நம்மாழ்வார் சந்நிதி [30]. இங்கே திருமங்கையாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் உடன் இருக்கிறார்கள். உடையவர் உபன்யாசம் செய்ய அவரது சிஷ்யர்கள் கேட்பதுபோலவும், அதேபோல மணவாள மாமுனிகளும் அவரது சிஷ்யர்களும் இருப்பதுபோலவும் உள்ள அழகான வண்ணச் சித்திரங்களை நம்மாழ்வார் சந்நிதிக்கு வெளியே காணலாம்.

ஆழ்P1010057வார்களுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு மேலே சென்றால், கொட்டாரம் [33] என்று அழைக்கப்படும் தானியக் கிடங்கைப் பார்க்கலாம். இவை ஒரு காலத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு வருமானமாக வரும் நெல்லைச் சேமித்து வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. இந்த நெற்களஞ்சியத்துக்குப் பக்கத்தில் தான்யலக்ஷ்மி அல்லது செங்கமல நாச்சியார் [34] சந்நிதியைப் பார்க்கலாம். இங்கே ஐந்து நெற்களஞ்சியங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் சுமார் 5,000 கலம் நெல் சேமித்து வைக்கலாம். 1487-ம் ஆண்டு கிருஷ்ணராயர் உத்தமநம்பியாலும் 1489-ம் ஆண்டு கந்தாடை இராமானுஜதாசனாலும் பழுதுபார்க்கப்பட்டது என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. இன்றைக்கு இந்த நெற்களஞ்சியங்கள் பாழடைந்த நிலையில், அவற்றைச் சுற்றிப் புதர்களும் குப்பை கூளமுமாகக் காட்சி தருகின்றன. நம் நாட்டில் Heritage என்பதற்கு நாம் தரும் மரியாதை இது.

IMG_9889கொட்டாரத்துக்கு வெளியே வந்தால் தாயார் சந்நிதிக்குப் போகும் வழியைப் பார்க்கலாம். இரண்டு பக்கமும் நீண்ட நெடிய மதில் சுவர் என்று பார்க்க பிரமிப்பாக இருக்கும். என்ன வெயில் அடித்தாலும் இந்தப் பாதை சுடாதது எப்படி என்று இன்றும் வியப்பாக இருக்கிறது. கொஞ்சம் தூரம் நடந்தால் மேலப் பட்டாபிராமன் கோவிலை [35] பார்க்கலாம். அதற்கு முன்பாக ஓர் இடத்தில் சத்தம் செய்தால் எக்கச்சக்கமாக எதிரொலி கேட்கும். எப்போதும் யாராவது ‘ரெங்கா ரெங்கா’ என்று அங்கே கத்திக்கொண்டே இருப்பார்கள். இந்தச் சந்நிதிக்கு அருகிலேயே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கான முதலாழ்வார்கள் சந்நிதி [36] இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் தீர்த்தப் பெருமாள் சந்நிதி இருக்கிறது. இவரே சந்திர புஷ்கரணிக்கு உரிய தெய்வம். இந்தச் சந்நிதிக்கு எதிர்ப்புறம் சந்திர புஷ்கரணி [52] இருக்கிறது.

சந்திர புஷ்கரணியில் சந்திரன் வந்து தவம்செய்து பலன்பெற்ற இடம் என்கிறது புராணக் கதை. ஸ்ரீரங்கம் தோன்றுவதற்கு முன்பே இந்தப் புஷ்கரணி இருந்து வந்திருக்கிறது என்கிறார்கள். இந்தக் குளத்தின் கரையில் புன்னைமரம் ஒன்று இருப்பதையும் பார்க்கலாம்.

சந்திர புஷ்கரணியின் கரைக்கு எதிர்ப்புறம் மருத்துவப் பெருமாளான தன்வந்தரி சந்நிதியை [38] பார்க்கலாம். ஒரு கையில் அமிர்த கலசமும் மற்றொரு கையில் அட்டைப் பூச்சியையும் ஏந்தியிருக்கும் தன்வந்திரிப் பெருமாளின் இந்தச் சந்நிதி கொஞ்சம் மேடான இடத்தில் இருக்கிறது. வெகு காலம் பழுதுற்றுக் கிடந்த சந்நிதியைப் புதுப்பித்து, அதற்கு இராமானுஜர் தன் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். இதைத் தவிர, தன்வந்தரிப் பெருமாளுக்கு இரவு நைவேத்தியத்துக்குப் பாலும் கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். இந்தச் சந்நிதி இஸ்லாமியப் படையெடுப்பில் அழிந்துபோனது; பின்பு 1493-ல் கருடவாகன பண்டிதரால் திரும்பவும் கட்டபெற்றது என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. இந்தச் சந்நிதிக்குள் சென்றால் இராமானுஜர் சந்நிதியைப் போலவே கொஞ்சம் சூடாக (வெக்கையாக) இருக்கும்.

சந்திர புஷ்கரிணியை ஒட்டியே வராகப் பெருமாள், வரதராஜப் பெருமாள் சந்நிதிகளை [51] பார்க்கலாம். இவர்களை தரிசித்துவிட்டு மேலே கொஞ்ச தூரம் சென்றால் கோதண்டராமர் சந்நிதியை [53] அடையலாம். இராமர், லட்சுமணர், சீதை நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள். அனுமார் வழக்கம் போல் பவ்யமாக இருக்கிறார். இந்தச் சந்நிதியில் தினமும் இராமருக்கு தயிர்சாதம்தான் தருகிறார்கள். உள்ளே சென்றால் குலசேகர ஆழ்வாரும் இருக்கிறார்; அவரையும் சேவித்துவிடலாம். (பெரிய பெருமாள் சேவை இல்லாத நேரங்களில் வரும் வெளிநாட்டவரை கைடுகள் இந்தக் கோவிலுக்கு அழைத்துப் போய் ‘ரெங்கநாத்ஜி- ஹாவ் தர்ஷன்’ என்று காண்பித்துவிடுவார்கள். இராமரின் ஆஜானுபாகுவான உருவை நம்பி, அழகில் சொக்கினாலும் அவர்களில் முன்விவரமாக வந்தவர்கள், பெருமாள் படுத்திருக்கவில்லையே என்று விசாரித்தால், ‘ரெங்கநாத்ஜி சிக்ஸ் மன்த்ஸ் ஸ்லீப்பிங், சிக்ஸ் மன்த்ஸ் ஸ்டாண்டிங்’ என்று பதில் வரும்; நம்பிவிடுவார்கள்.)

கோதண்ட ராமர் சந்நிதிக்குப் பக்கதில் இருப்பது பரமபதநாதன் சந்நிதி [54]. வைகுண்டநாதன் என்றும் இவரை அழைப்பர். இங்கே விஷ்ணு வைகுண்டத்தில் எப்படி இருப்பாரோ அப்படியே காட்சி தருகிறார். ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் விஷ்ணுவின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இங்கே மற்ற ஆழ்வார் ஆசார்யர்களையும் ஆண்டாளையும் பார்க்கலாம்.

அடுத்ததாக நாம் பார்ப்பது வியாச முனிவரின் சந்நிதி [55]. வேதவியாசர் விஷ்ணுவின் ஓர் அம்சமாகக் கருதப்படுகிறார். வேதம், புராணம் முதலியவற்றை இவர்தான் இயற்றினார். ஒரு நூலகம் அமைக்கும்போது, சரஸ்வதி, ஹயக்ரீவர், வேதவியாசர் சிலைகளை பாலாபிள்ளை நீலகண்ட நாயக்கர் என்பவர் நிறுவினார் என்ற குறிப்பு இருக்கிறது. பிறகு சில காலம் கழித்து இந்த வேதவியாசர் விக்கிரஹம் மட்டும் இங்கே வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதற்குப் பக்கத்தில் இருக்கும் சந்நிதி இன்னொரு இராமர் – கீழப் பட்டாபிராமன் சந்நிதி [56]. கிழக்குப் பக்கத்தில் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். லட்சுமணன், பரதன், சத்ருக்னன், கருடன் போன்றவர்கள் சேவை செய்துகொண்டிருக்க இங்கே இராமரும், சீதையும் உட்கார்ந்த திருக்கோலம்.

ஸ்ரீரங்கத்தில் இராமருக்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் இருக்கின்றன. வெளி ஆண்டாள் சந்நிதியில் இராமர் இருப்பதைப் பார்த்தோம். மேலப் பட்டாபிராமன் சந்நிதியைக் கொட்டாரம் பக்கத்தில் பார்த்தோம். கோதண்ட இராமர் சந்நிதியில் இராமர் நின்றுகொண்டிருந்தார்; இப்போது கீழப் பட்டாபிராமன் சந்நிதியில் அமர்ந்த திருக்கோலம்.

இதைத் தாண்டி வந்தால் பக்கவாட்டில் கீழத் தட்டரை வாசல் [57] இருக்கும். இதன் வழியாகச் சென்றால் முன்பு பார்த்த ஆயிரங்கால் மண்டபம், சேஷராயர் மண்டபம், வெள்ளை கோபுரம் ஆகியவற்றுக்குச் செல்லலாம். அதை முன்பே பார்த்துவிட்டதால் நாம் தொடந்து மணலில் நடந்துசெல்லலாம்.

கால் பொரியப் பொரிய நடந்துபோனால் இன்னொரு (ஐந்தாவது) இராமர் சந்நிதி – போஜராமர். அதற்குப்பிறகு கோவில் திருமடப்பள்ளி; விறகுகளின் குவியலும் புகைபடிந்த கட்டடமும் பார்க்கலாம். புகை வருவதும், கூடவே சர்க்கரைப் பொங்கல், புளியோதரை வாசனையும் ஒருவித நெய் வாசனையுடன் – பசிக்க ஆரம்பிக்கும்.

இங்கே முன்பு பார்த்த கம்பர் மண்டபம் மாதிரி ஒரு சின்ன மண்டபம் இருக்கும்; அதில் இருக்கும் ஒரு தூணில் விபீஷணன் ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்றுக்கொள்ளும் காட்சியைச் செதுக்கியிருப்பார்கள். ஸ்ரீரங்க புராணத்துக்கு இருக்கும் ஒரே சாட்சி இது.

அங்கே மூலையில் ஒரு சந்நிதியில்தான் திருமழிசை ஆழ்வார் [58] இருக்கிறார். அதற்குப் பக்கத்தில் இருக்கும் இடம் ஸ்ரீபண்டாரம் [59] என்று அழைக்கப்படும் பெருமாள் பிரசாதம் விற்கும் இடம். அதற்குப் பக்கத்திலேயே பெருமாள் வாகனங்கள் வைக்கும் இடம். இங்கேதான் நாம் முதலில் பார்த்த சூரிய புஷ்கரணி இருக்கிறது. அதற்குப் பிறகு மூலையில் இராமானுஜரின் அபிமான குருவாகிய திருக்கச்சி நம்பிகளின் சந்நிதியை [62] பார்க்கலாம். இப்போது நாம் முன்பு பார்த்த கருட சந்நிதிக்கு வந்துவிட்டோம்.

வாருங்கள் மூன்றாம் திருச்சுற்றுக்குச் செல்லலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s