Temple Guide

மூன்றாம் திருச்சுற்று

Map of Srirangam-3

Map-3

We go past the Aryabhatal vaasal into the 3rd prakaram aka Kulasekaran Thiruchutru.  With Sujatha Desikan. (The numbers in brackets refer to the locations on Map of Srirangam Temple. To follow them, keep the Map-3 open in a new Tab.)

மூன்றாம் திருச்சுற்று

மூன்றாம் திருச்சுற்று ‘குலசேகரன் திருச்சுற்று’ என்று அழைக்கப்படுகிறது. இதன் வாசலை ‘ஆர்யபடாள் வாசல்’ [18] என்று அழைக்கிறார்கள். (படர் – வீரர். ‘படர்கள்’ என்பது மருவி ‘படாள்’ ஆகியது.) வங்கப் பகுதியான கௌட தேச அரசர் ஒருவர், தான் மிக விரும்பி ஏராளமான திரவியங்களை திருவரங்கனுக்கு அளிக்க முன்வந்தார். ஆனால் கோவிலார் அந்தச் செல்வத்தின் மூலம் குறித்துச் சந்தேகப்பட்டு அவற்றை ஏற்க மறுத்தனர். விரக்தி அடைந்த மன்னன் அவற்றை அந்த வாசலிலேயே போட்டுவிட்டு, தன் தேசத்து ஆரிய அந்தணர்களைக் காவலுக்கும் வைத்துவிட்டுப் போய்விட்டான். ஆரிய அந்தண வீரர்கள் பலகாலம் காவல் காத்த நேர்த்தியைப் பார்த்து கோவிலில் திரவியங்களை ஏற்றுக்கொண்டு அவர்களையே கோவில் காவலர்களாகவும் நியமித்தார்களாம். அவர்கள் இந்த வாசலைக் காவல் காத்து வந்தார்கள் என்பதால் அவர்களின் பெயரிலேயே இந்த வாசல் அழைக்கப்படுகிறது. பின்னர் இராமானுஜர் ஊழியர்களின் பல பிரிவுகளை (கொத்து என்று சொல்வர்) ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை ஒதுக்கிக்கொடுத்தார் என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. அதில் காவலர் பிரிவின் பெயர் ஆரியபடாள்.

நாம் உள்ளே சென்றவுடன் பார்ப்பது துவஜஸ்தம்பமும் பலிபீடமும் [19]. இந்த இடத்துக்கு ‘அணியரங்கன் திருமுற்றம்’ என்று பெயர். தற்போது இது தங்கமுலாம் பூசப்பட்ட தகட்டால் வேயப்பட்டிருக்கிறது.
கிழக்குப் பக்கம் ஊஞ்சல் மண்டபம் [27], வடக்கு பக்கம் பவித்ரோத்சவ மண்டபம் [20]. இந்த மண்டபத்துக்குள் சரஸ்வதியையும் ஹயக்ரீவப் பெருமாளுளையும் [21] சேவித்துவிட்டு கொஞ்சம் நடந்தால் (இவர்களுடன் இருந்த வேதவியாசர் இப்போது சந்திர புஷ்கரணிக்குப் பக்கத்தில் இருக்கிறார்) பழைய வாகன அறைகள் வரும். அதைத் தொடந்து இருக்கும் மண்டபத்துக்குப் பெயர் ‘துரை மண்டபம்’ [23]. இங்கு இருக்கும் வேலைப்பாடுகள் பாண்டியர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிகிறது. பரமபத வாசல் திறப்பதற்குமுன் இங்கே வேதவிண்ணப்பம் நடைபெறுவதை வைகுண்ட ஏகாதசி அன்று நீங்கள் ஜெயா டிவியில் பார்க்கலாம். இந்த மண்டபத்துக்கு அடியில் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பரமபத வாசல் செல்வதற்குமுன் இங்கே வணங்கிவிட்டு (விரஜா நதியில் நீராடிய பலன்) செல்லவேண்டும். இங்குஉள்ள தூண்களில் சேஷராயர் மண்டபத்தில் இருப்பதுமாதிரி தசாவதாரச் சிற்பங்களைக் காணலாம்.

அதைத் தாண்டி வந்தால் இடது பக்கம் கதவு ஒன்று மூடியிருக்கும். இதுவே பரமபத வாசல் [24] என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல். இதைத் தாண்டுவதற்குமுன் தலையைத் தூக்கிப் பார்த்தால் விதானத்தில் இரட்டைப் பல்லியைப் பார்க்கலாம் (ஏன் பார்க்கவேண்டும் என்று பின்னால் சொல்கிறேன்). இந்த சொர்க்கவாசல் கதவுகளைத் திறந்தால் அதன் வழியே முன்பு நாம் பார்த்த சந்திர புஷ்கரிணி, தன்வந்திரி சந்நிதி, தாயார் சந்நிதிகளுக்குச் செல்லலாம். ஆனால் அது வைகுண்ட ஏகாதசி, அதை ஒட்டிய இராப் பத்து உற்சவ நாள்களில் மட்டுமே சாத்தியம்.

வாசலுக்குள் நுழையாமல் இன்னும் கொஞ்சம் நடந்தால், அதற்கு பக்கத்தில் விரஜா நதிக் கிணறு ஒன்று இருக்கிறது, அதையும் தாண்டி வந்தால், நீளவாட்டத்தில் அரவிந்த நாச்சியார் திருமடைப்பள்ளி (பெரிய திருமடைப்பள்ளி) [25]. அதன் வாசலில் அன்னமூர்த்தி [26] எழுந்தருளியுள்ளார். வாசலில் இருக்கும் கருடனுக்குப் பெயர் ஒற்றைக்கால் கருடன் [22]. இந்த மண்டபத்தின் மேற்கூறை மூன்று பக்கங்களிலும் சுவற்றுடன் இணைந்து ஒரே தூணில் நிற்பது வியப்பைத் தரும். இவற்றையும் பார்த்துக்கொள்வது நல்லது. பரமபதத்தை அடைவதற்குமுன் எமன், ‘ஒற்றைக்கால் கருடனையும் ஒற்றைத் தூணையும் பார்த்தாயா? இரட்டைப் பல்லியைப் பார்த்தாயா?’ என்று கேட்பானாம். இவற்றைப் பார்த்ததுதான் நாம் சொர்க்கவாசலைக் கடந்ததற்கு சாட்சி.

இதைத் தாண்டி வந்தால் முன்பு நாம் பார்த்த ஊஞ்சல் மண்டபம் வரும். இங்கே இருக்கும் தூண்கள் இரட்டைக் கற்தூண்கள், அதில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் பார்க்கவேண்டியவை. அங்கே இரு கிணறுகளைப் பார்க்கலாம். ஒன்று நெய்க் கிணறு; மற்றொன்று பால் கிணறு. அதற்குப் பக்கத்தில் ஏணி வழியாக மேலே சென்று ஸ்ரீரங்க விமானத்தைப் பார்க்கலாம். கீழே இறங்கி வந்தால் ஆஞ்சநேயர் சந்நிதி [28] ஒன்று இருக்கிறது. இங்கேயும் பக்தர்கள் வெண்ணையைத் தடவியுள்ளார்கள். இங்கே இருக்கும் மேடையில் எப்போதும் பளபளவென்று தேய்த்து வைக்கப்பட்ட பெருமாள் திருமஞ்சன தீர்த்தக் குடங்கள் இருக்கும்.

திரும்பவும் பலிபீடத்துக்கு வந்து அடுத்த வாசலுக்குப் போகலாம் வாருங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s